கோவை : உரிய அனுமதியின்றி மரங்களை வெட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையிலான சட்டம் இயற்றப்பட வேண்டும் எனக் கோவையில் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை : உரிய அனுமதியின்றி மரங்களை வெட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையிலான சட்டம் இயற்றப்பட வேண்டும் எனக் கோவையில் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உக்கடம் பகுதியை அடுத்த கரும்புக்கடை, சவுகார் நகரில் வசித்து வரும் அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் வார்டு உறுப்பினர் முத்து என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டின் அருகே உள்ள மரத்தை வெட்ட முயற்சித்துள்ளார். ஆனால், ஓசை தொண்டு நிறுவனம் மற்றும் அப்பகுதியினரின் கடும் எதிர்ப்பால் அந்த செயல் கைவிடப்பட்டது. இந்த நிலையில், கட்டுமானப் பணிக்காக 15 ஆண்டுகள் பழமையான போதி மரத்தை வெட்டியுள்ளார். இதையறிந்த ஓசை தொண்டு நிறுவனத்தின் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், வருவாய் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள் முன்னாள் வார்டு உறுப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து, 10 மரக்கன்றுகளை நடவு செய்து பராமரிப்பதாக அவர் உறுதியளித்தார்.
"சட்டவிரோதமாக இதுபோன்று மரங்களை வெட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே, உரிய அனுமதியின்றி மரங்களை வெட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையிலான சட்டம் இயற்றப்பட வேண்டும். மனிதர்கள் வாழ்வதற்கு மரங்கள் இன்றியமையாதது என்பதை உணர வேண்டும்", என ஓசை தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சையத் கூறினார்.